June 11, 2026

இயக்குனர் இமயம் பாரதிராஜா


என் இனிய தமிழ் மக்களே,

இந்த அழகுசெல்வன் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது பார்த்த 16 வயதினிலே படத்தில், எனக்குப் பிடித்தது பரட்டை கதாபாத்திரம் மட்டுமே. படத்தின் ஆழம் அப்போது புரியவில்லை. “காமெடியன் ஏன் ஹீரோவைக் கொன்றான்?” என்ற குழப்பத்திலேயே இருந்த எனக்கு அறிமுகமானவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா.

பழைய கருப்பு-வெள்ளைப் படங்களில் காணப்பட்ட செயற்கையான கிராமங்களைக் கடந்து, தமிழ் சினிமாவை யதார்த்தத்தின் பாதைக்கு அழைத்துச் சென்றவர் பாரதிராஜா என்பதே என் பார்வையில் அவரது மிகப்பெரிய சாதனை. இயக்குநராக மட்டுமே தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட கடைசி தலைமுறை தமிழ் இயக்குநர்களில் முக்கியமானவர் என்றும் சொல்லலாம். எண்பதுகளில், அவருடன் திறமையான கதை மற்றும் வசனகர்த்தாக்கள்கொண்ட ஒரு வலுவான படைப்புக் குழு இருந்தது.

அந்தக் காலகட்டத்தில் என்னை அவரது தீவிர ரசிகனாக மாற்றிய படங்களின் பட்டியல் நீளமானது. கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்கள், கல்லுக்குள் ஈரம், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், மண்வாசனை, புதுமைப் பெண், ஒரு கைதியின் டைரி, முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள், வேதம் புதிது — இவை அனைத்தும் எண்பதுகளில் வெளிவந்த படைப்புகள். ஒவ்வொன்றும் தனித்துவமான அனுபவம்.

பாரதிராஜா – இளையராஜா – வைரமுத்து கூட்டணி உருவாக்கிய பாடல்கள் இன்றும் என் இசைப் பட்டியலில் நிரந்தர இடம் பெற்றவை. பின்னர் அந்தக் கூட்டணி பிரிந்தாலும், அவர்கள் இணைந்து படைத்த பாடல்கள் காலத்தை வென்று நிற்கின்றன.

பாரதிராஜாவின் மகுடப் படைப்பு என்று நான் கருதுவது முதல் மரியாதை. அது அவரது சிறந்த படைப்பு மட்டுமல்ல; சிவாஜி கணேசனை மீண்டும் கண்டறிய வைத்த படமும் கூட. ஆரம்ப கால எம்.ஜி.ஆர். ரசிகனாக இருந்த நான், சிவாஜியின் நடிப்பை நக்கல் செய்த காலம் உண்டு. ஆனால் முதல் மரியாதை என்னைத் திரும்பிப் பார்க்க வைத்தது. அதன் பிறகு அவரது பல கருப்பு-வெள்ளைப் படங்களைத் தேடிப் பார்த்து ரசிக்க ஆரம்பித்தேன். கலர் படங்களில் முதல் மரியாதை மற்றும் தேவர் மகன் மட்டுமே என்னை ஆழமாகக் கவர்ந்தன.

1989-ல் வெளியான கொடி பறக்குது என்னை பாரதிராஜாவிடமிருந்து சற்றே விலக்கிய படம். தீவிர ரஜினி ரசிகனான என்னால் அதை ரஜினி படமாகவும் முழுமையாக ரசிக்க முடியவில்லை; பாரதிராஜா படமாகவும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அமலா மட்டுமே ஒரே ஆறுதல். அப்போது நான் முதல் ஆண்டு கல்லூரி மாணவன்.

1990-ல் வெளியான என் உயிர்த் தோழன் தமிழ் சினிமாவின் முக்கியமான அரசியல் படங்களில் ஒன்றாக நான் கருதுகிறேன். பாபு கதாபாத்திரத்தைப் போல சென்னைத் தமிழை இயல்பாகப் பேசிய மற்றொரு நாயகனை, உலக நாயகன் உட்பட, இன்றுவரை நான் பார்த்ததில்லை.

தொண்ணூறுகளில் கிழக்குச் சீமையிலே, கருத்தம்மா, பசும்பொன் ஆகிய படங்கள் எனக்கு மிகவும் நெருக்கமானவை. அதிலும் தீவிர இளையராஜா ரசிகனான என்னால், கிழக்குச் சீமையிலே படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் நிகழ்த்திய இசை மாயாஜாலத்தைப் புறக்கணிக்க முடியவில்லை.

பாரதிராஜா அமைத்த பாதையில் பல இயக்குநர்கள் பயணிக்கத் தொடங்கினர். அவர்களோடு சேர்ந்து நானும் பயணித்தேன்; காலப்போக்கில் பாரதிராஜாவிடமிருந்து சற்றே விலகினேன். ஆனால் அந்த விதையை விதைத்தவர் அவர்தான். அந்த அடித்தளத்தை அமைத்தவர் அவர்தான்.

கல்லுக்குள் ஈரம் படத்தில் இயக்குநர் பாரதிராஜாவாகவே அவர் தோன்றிய விதம் என்னை ரசிக்க வைத்தது. பின்னர் ஆயுத எழுத்து படத்தின் மூலம் ஒரு சிறந்த நடிகராக தன்னை மீண்டும் அறிமுகப்படுத்தினார். நடிகராக வேண்டும் என்ற ஆசையோடு சினிமாவுக்குள் வந்து, அறுபது வயதைக் கடந்தபின் நடிகராக அங்கீகாரம் பெறுவது பெரிய விஷயம்; அதிலும் சிறப்பாக நடித்து பாராட்டைப் பெறுவது இன்னும் பெரிய விஷயம். ரெட்டச்சுழி, பாண்டிய நாடு, குரங்கு பொம்மை, திருச்சிற்றம்பலம் ஆகிய படங்களில் அவரது நடிப்பு என்னை மிகவும் கவர்ந்தது.

தமிழ் சினிமாவில் பாரதிராஜா ஒரு இயக்குநர் மட்டுமல்ல; ஒரு திருப்புமுனை. அவர் வந்த பிறகு கிராமங்கள் மாறின, கதைகள் மாறின, கதாபாத்திரங்கள் மாறின, தமிழ் சினிமாவின் மொழியே மாறியது. அந்த மாற்றத்தை நேரில் பார்த்த தலைமுறையைச் சேர்ந்தவன் என்பதில் எனக்கு எப்போதும் ஒரு பெருமை உண்டு.

என்னை ஒரு சினிமா பைத்தியமாக மாற்றியவர்களில் முக்கியமானவர் பாரதிராஜா. Long live his fame!

No comments:

Post a Comment