November 3, 2008

திருக்குறள் பாதிப்பில் உருவான கவிதைகள்

திருக்குறள் பாதிப்பில் நான் எழுதிய கவிதைகளை இங்கே தொகுக்க உத்தேசம். பரிமேழகர் முதல் கலைஞர் சுஜாதா வரை பலரின் உரைகளைப் படித்து அலசியபின் என்னுள் தோன்றிய கவிதைகள் இவை.

நான் தற்சமயம் கவிதை எழுதுவதில்லை! இவை என்னால் தொன்னூறுகளில் எழுதப்பட்டவை. சுமார் பத்துப் பனிரெண்டு வருடங்களுக்குப்பின் இவற்றை தொகுக்கும்போது வார்த்தைகளில் மாற்றம் செய்வது தவிர்க்க முடியாததாகிவிட்டது! எனினும், பொருளை மாற்றவில்லை!! இவை என்னால் புனையப்பட்ட உரையும் அல்ல. சிலவற்றின் தரம் சரியில்லை என ஒதுக்கியும் இருக்கிறேன்.

முதலில் கடவுள் வாழ்த்து; பிறகே இன்பத்துப் பால்!!

அனைத்திற்கும் ஆரம்பமுண்டு -
மொழிக்கு அகரம்
உலகிற்குக் கடவுள்


என்ன கற்று என்ன பயன்
அறிவின் எல்லை
ஆண்டவன் தொழாமல்?


விருப்பில்லை வெறுப்பில்லை அவனுக்கு
துன்பமில்லை துயரமில்லை, உனக்கு
அவன் பாதம் சேரின்!


உன் வார்த்தைகள்
ஊசியாய் இதயம் குத்தும்!
கிழிந்த இதயம் தைக்கும்!!


இரும்புக்கு இரும்பே ஆபரணமாகுமா?
ஆகலாம்!
தங்கத்துக்கு தங்கம் ஆகும் போது!!


மானா? மீனா? தேனா?
இவளே நானா?
இதுவரை தெரியவில்லை!
மனத்தால் மட்டுமே பிரியவில்லை!!


என் பார்வைக்கு எதிர் பார்வை பார்க்காதே!
உன்னை நான் பார்ப்பதே என்னை வீழ்த்தும்!!
ஒரே வீரனால் விழும் எனக்கு
எதற்கடி படை திரட்டுகிறாய்?


காலனை நேரில் பார்த்தும்
மரிக்கவில்லை!
உன் கண்களைச் சொன்னேன்
மறக்கவில்லை!!


உன் முகமே
உனக்கொரு ஆபரணம்!
பின் ஏனடி தங்கத்தில்?


உன் சம்மந்தப்பட்ட எல்லாமே மென்மை!
உன்னுடன் சேர்ந்த்தபின் நானும்!!
உன் கண்கள் இரண்டும் வன்மை! அதுதான் உண்மை!!


உன் தோளில்
முகம் புதைப்பதைவிட
சொர்க்கம் இன்பமானதா?


அஞ்சா நெஞ்சன் நான்!
அஞ்சுவர் என்னிடம் அனைவரும்!!
பழங்கதை ஆனதிது!
உன் கண்களால்
நான் வீழ்ந்து பட்டபோது!!


மாதே! உன்னின் மதுவே நலம்!
அதை உண்டால்தான் போதை!
உன்னையோ பார்த்தாலே!!


பொது இடத்தில்
அந்நியர் போலிருந்தால்
காதலராம்!
நாம் எப்படி?


இவளுக்குக் கண்கள் மட்டுமல்ல
பார்வையும் இரண்டு!
ஒன்று வருத்தும்!
மற்றது மருந்திடும்!!


விலகினால் சுடுகிறாள்
நெருங்கினால் குளிர்கிறாள்
விசித்திர நெருப்பு!


அதிகம் பால்தான் புளிக்கும்
இன்பமுமா?
கடைக்கண்பார்வை விட்டு
நேர்ப்பார்வைதான் பாரேன்!


கண்கள் இருப்பதால்
ஊமையானேன்
விழிமொழிதானே
பேசுகிறோம்!


விரும்பும்போதெல்லாம்
இன்பம் தரும் அட்சயபாத்திரம்
உன் தோள்கள்!


பாம்பின் விஷமும்
நீயும் ஒன்று!
விஷமுரிவுக்கு விஷமே மருந்து
உன்னால் வரும் காதலுக்கு
நீயே மருந்து!


நினைவு மட்டும்
கனவு கலைக்காதிருந்தால்
இன்னும் சிலநேரம்
பேசியிருந்திருக்கலாம்!


தற்கொலை செய்கிறது
ஒரு நட்சத்திரம்!
நீயா? நிலவா? தெரியாமல்!
எனக்காவது சொல்
இல்லை நானும்!


பாலும் தேனும்
கலந்த சுவை அறிவாயா?
உன் இதழின்
சுவை நீ அறியாயா?


நான் உன்னை
நினைப்பதேயில்லை
மறந்தால்தானே
நினைப்பதற்கு!


கண்ணுக்கு மையிடாதே
என் முகத்தில்
கரி பூசாதே!


நான்
சூடாக உண்பதில்லை
உனக்கு வலிக்கும்
என்பதால்!


நாம் சேர்ந்து வாழ்கிறோம்
என்றால்
பைத்தியம் என்கிறார்
உள்ளம் இணைந்ததை
அறியார் பாவம்!


திமிர், ஆணவம், ஈகோ
தோணிகள் கவிழ்த்தது
காதல் வெள்ளம்!


உனக்கும் எனக்கும்
காதலென்று
வதந்தியாவது கிளம்பாதா?
நீதான் கிடைக்கவில்லை,
கொஞ்சம்
இன்பமாவது கிடைக்கட்டுமே!


மதுவே தொடாதவன்
தொட்டதும்
தொட்டுக்கொண்டே இருப்பான்!
காதலே கிட்டாதவன்
கிட்டியதும்
காதலித்துக்கொண்டே இருப்பான்!!


நாம் தனிமையில்
சந்தித்ததே
ஒரே முறைதான்!
பிள்ளையார்
பால் குடித்த செய்திபோல்
இதுவும் ஊரெங்கும்
பரவிக்கிடக்கிறதே!!


காதல் பயிருக்கு
ஊரார் பேச்சு உரம்!
வீட்டார் பேச்சு நீர்!!
பயிர் செழித்து வளர
வேறென்ன வேண்டும்?


எரியும் நெருப்பில் எண்ணெய்!
காதலுக்கு எதிர்ப்பு!!
ஊருக்கு வேறென்ன வேலை?


நீரின்றி மீன் வாழும்!
நீயின்றி நான்?


கனவிலாவது
வருகிறாயே!
வாழ்கிறேன்..


காதலில்
இன்பம் கடலளவு!
துன்பம்?
கடலைவிட
பெரியது கண்டதும்
சொல்கிறேன்!!


இருளே
எனக்கு நீயே துணை!
நம்மைத்தவிர
யார் விழித்திருக்கிறார்?
நிலவிற்க்குக்கூட
இன்று விடுமுறை!


அவளைப் பிரிந்ததால்
நீர் விடும் கண்ணே!
உன்னால்தானே
அவளையே பார்த்தேன்!
அடிப்பேன் என்று பயந்து
அழுதாயோ?


அவளை எனக்குக்
காட்டியதே நீதான்!
பிரிந்து துடிப்பதற்கும்
காரணம் நீதான்!!
இனி நான்
தூங்கவே மாட்டேன்!
கண்களே
உங்களுக்கு அதுதான்
தண்டனை!!


கண்ணீர் சிந்துவதிலும்
ஒரு மகிழ்ச்சி!
காதலுக்குக் காரணமான
கண்களே அழுவதால்!!


பார்க்கும் நாட்களிலும்
உறக்கமில்லை!
பார்க்காத நாட்களிலும்
உறக்கமில்லை!!
காதலிரின் கண்களே
என்ன பாவம் செய்தீர்கள்?

No comments:

Post a Comment