October 2, 2026

மீண்டும் (வாசிப்பில்) ஒரு காதல் கதை!

“ஒரு புத்தகத்துக்குள் புழுவாய் நுழைபவன், வண்ணத்துப்பூச்சியாய் வெளிவருகிறான்” என்று சொல்லி இருக்கிறார் ஒரு தமிழறிஞர். இந்த வரி எப்போதுமே எனக்குப் பிடிக்கும். 

கோவிட் காலத்தில் வீட்டில் முடங்கி கிடந்தபோது, நிறைய புத்தகங்கள் படிக்க அவகாசம் கிடைத்தது. ஆனால், அதிலிருந்து மீண்டு வந்த பிறகு நேரம் கிடைப்பது மிகவும் அரிதாகிப் போனது. 

அப்படி அரிதாகக் கிடைக்கும் நேரமும் ரோட்டரியிலும், நெட்ஃபிளிக்ஸ் பிரைமிலும் சென்று சேர்ந்து கொண்டிருக்கிறது. 😄

புத்தகம் வாசிக்கும் பழக்கம் விட்டுப்போனாலும், வாங்கும் பழக்கம். மட்டும் விட்டுப்போகவில்லை. வாங்கி, வாசிக்காமல் வைத்துள்ள பல புத்தகங்கள் வீட்டில் தூசி படிந்தபடி என்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. அந்தத் தூசியைத் தட்டுவதற்குக் கூட நேரமில்லாமல் நானும் ஓடிக்கொண்டிருக்கிறேன். 

திடீரென, மீண்டும் படிக்க ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணம் இன்று தோன்றியது.

அதற்காக தூசி தட்டி எடுத்த புத்தகம் தான் “கரும்பலகைக் கதைகள்”.



 ஆசிரியர்களுக்குப் பரிசாகத் தருவதற்காக ஒரு புத்தகம் என்று தொடங்கிய இந்தப் புத்தகம், மாணவனாகவும் ஒரு சில வருடங்கள் ஆசிரியராகவும் இருந்த எனக்கு நெருக்கமாக இருக்கும் என்ற நம்பிக்கையில், இன்று இதைப் படிக்க ஆரம்பிக்கிறேன். 720 பக்கங்கள். சற்று மலைப்பாகத்தான் இருக்கிறது.

பார்ப்போம்… இந்தப் புத்தகம் என்னை எங்கே அழைத்துச் செல்கிறது என்று! 📚

இந்தப் புத்தகத்தில் பவா செல்லதுரை, நாஞ்சில்நாடன், தி. ஜானகிராமன், கு. அழகிரிசாமி, கி. ராஜநாராயணன், சுந்தர ராமசாமி, பிரபஞ்சன், சா. கந்தசாமி, பூமணி போன்றவர்களின் சிறுகதைகளும்,

அசோகமித்திரன், அப்துல் ரகுமான், வைரமுத்து, கண்ணதாசன், ட்ராஸ்கி மருது, ஜெயமோகன், இறையன்பு, பழனி பாரதி, தமிழருவி மணியன், தொல். திருமாவளவன், நாசர், தங்கர்பச்சான், வெற்றிமாறன், தமிழிசை சௌந்தர்ராஜன், யுகபாரதி, சாலமன் பாப்பையா போன்றவர்களின் கட்டுரைகளும்,

அசோகமித்திரன், வண்ணதாசன், மனுஷ்யபுத்திரன், நா. முத்துக்குமார், கலாப்ரியா, பிரபஞ்சன் போன்றவர்களின் நினைவுச் சித்திரங்களும் இடம் பெற்றிருக்கின்றன.

இத்தனை எழுத்தாளர்கள்… இத்தனை அனுபவங்கள்… இத்தனை பக்கங்கள்!

இனி அடுத்த சில நாட்களுக்கு ரோட்டரியும், நெட்ஃபிளிக்ஸ் பிரைமும் கொஞ்சம் காத்திருக்க வேண்டியதுதான். 😄

படித்து முடித்துச் சொல்கிறேன்… என் கருத்துக்களை!